சென்னை எழும்பூர்- கடற்கரை இடையில் 4-வது வழித்தடம் அமைவது காலதாமதம் ஏன்...?


சென்னை எழும்பூர்- கடற்கரை இடையில் 4-வது வழித்தடம் அமைவது காலதாமதம் ஏன்...?
x
தினத்தந்தி 22 July 2023 6:41 AM GMT (Updated: 22 July 2023 7:01 AM GMT)

சென்னை எழும்பூர்- கடற்கரை இடையில் 4-வது வழித்தடம் அமைவது காலதாமதம் ஆவதால் 2025-ம் ஆண்டு தான் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்துடன், பறக்கும் ரெயில் சேவை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

சென்னை

சென்னை,

சென்னை பறக்கும் ரெயில் சேவை சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. வேளச்சேரியையும் - பரங்கிமலையையும் இணைக்கும் பறக்கும் ரெயில் திட்டப் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, பறக்கும் ரெயில் சேவையை மெட்ரோ ரெயிலுடன் இணைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை 2018-ம் ஆண்டு தெற்கு ரெயில்வேயிடம் சமர்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திட்டத்திற்கான சாத்தியக்கூறு குறித்து பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடந்தன. அதே நேரத்தில், சென்னை எழும்பூர் - கடற்கரை இடையில் 4-வது வழித்தடம் அமைத்த பிறகு இணைப்புப் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2023 - 2024-ம் நிதியாண்டில் இந்த திட்டத்திற்கு ரூ.96.70 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர்-கடற்கரை இடையிலான 4-வது வழித்தடத்திற்கான பணிகள் காலதாமதம் ஆவதை தடுக்கும் வகையில், இந்த பணிகளை தொடர்ந்து விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை தவிர்த்து பறக்கும் ரெயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து மெட்ரோ ரெயில் நிலையங்கள் போல் மாற்ற சி.எம்.டி.ஏ. முடிவு செய்துள்ளது. மந்தைவெளி, கீரின்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபாய்நகர், இந்திரா நகர், திருவான்மியூர், பெருங்குடி, வேளச்சேரி உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் மேம்படுத்தபடவுள்ளது. இந்த ரெயில் நிலையங்கள் தற்போது 4 முதல் 8 தளங்கள் கொண்ட ரெயில் நிலையங்களாக உள்ளன.

அதில் வணிக வளாகங்கள், உணவங்கள், வாகன நிறுத்துமிடம் உள்ள அனைத்து வசதிகளை உள்ளடக்கிய திட்டம் தயாரிக்க சி.எம்.டி.ஏ. கடந்த ஓராண்டுக்கு முன்பே முடிவு செய்திருந்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், தெற்கு ரெயில்வேக்கும் இடையே அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த பணிகளும், சென்னை எழும்பூர்-கடற்கரை இடையில் 4-வது வழித்தடத்திற்கான பணிகளும் முடிந்த பிறகு 2025-ம் ஆண்டுக்கு தான் மெட்ரோ ரெயில் நிர்வாகத்துடன் பறக்கும் ரெயில் சேவை இணைக்கப்படும் என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்த பணிகள் 2024-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது.


Next Story