காரைக்குடி மாணவரிடம் செல்போனில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

படிப்புக்கு உதவி கேட்டு கடிதம் எழுதிய காரைக்குடி மாணவரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் பேசினார். அவர் நீட் தேர்வுக்கான புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்தார்.
காரைக்குடி மாணவரிடம் செல்போனில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள வேங்காவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசேகர். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களது மகன் வசந்தகுமார் (வயது 18). இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து இருந்தார். பிளஸ்-2 தேர்வில் 473 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவருக்கு டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது.அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில் நீட் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்க போதிய பணவசதி இல்லாததால், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் அரசு சார்பில் நடைபெற்று வரும் இலவச பயிற்சி மையத்தில் சேர முயன்றார். ஆனால் அங்கும் இடம் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த வசந்தகுமார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அதில் தனது குடும்ப நிலையினைக்கூறி இலவச நீட் பயிற்சி மையத்திலும் சேர்ந்து படிக்க உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மாணவர் வசந்தகுமாரின் செல்போன் எண்ணுக்கு நேரடியாக தாடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறேன். நீட் தேர்வு பயிற்சிக்கு செல்கிறீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு மாணவர் தனியார் பள்ளியில் படித்ததால்தான் அரசு இலவச பயிற்சி மையத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை என கூறினார். இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக முதல்-அமைச்சர் தெரிவித்து நன்றாக படிக்க வேண்டும். தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார்.அதனைத்தொடர்ந்து மாணவர் வசந்தகுமாரின் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் நீட் தேர்விற்கு படிப்பதற்கான புத்தகங்களை அவரிடம் வழங்கியுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com