எஸ்.எஸ்.சி. தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் மத்திய அரசின் அறிவிப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு


எஸ்.எஸ்.சி. தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் மத்திய அரசின் அறிவிப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
x

எஸ்.எஸ்.சி. தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் மத்திய அரசின் அறிவிப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய அரசின் பணிகளில் சேருவதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. இந்த தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் நடத்தவேண்டும் என பல்வேறு மாநிலங்கள், குறிப்பாக தென்மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில், மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எஸ்.எஸ்.சி எம்.டி.எஸ் மற்றும் சி.எச்.எஸ்.எல். ஆகிய தேர்வுகளை தமிழ், தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம் உள்பட 13 மாநில மொழிகளில் நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசின் பணிகளில் சமவாய்ப்பு கிடைக்கவேண்டும், மேலும் மொழிதடையால் ஒருவரது உரிமை பறிபோகக்கூடாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க இந்த நடவடிக்கை இருப்பதாக மத்திய பணியாளர் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

முன்னதாக மத்திய ஆயுத படை தேர்வான, சிஏபிஎப் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் எழுதுவதற்கு மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளதாவது:

மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப் ) காவலர்கள் (பொதுப் பணி) தேர்வை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக 13 பிராந்திய மொழிகளில் நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். கடந்த வாரம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 13 பிராந்திய மொழிகளில் நடத்த ஏப். 15-ஆம் தேதி உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது.

இந்நிலையில், மத்திய அலுவலர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தும் கடைநிலை ஊழியர்கள் உள்ளிட்ட பலவகை பணியாளர் தேர்வு (எஸ்எஸ்சி எம்டிஎஸ்), ஒருங்கிணைந்த மேல்நிலைப் பணியாளர் தேர்வு (சிஹெச்எஸ்எல்இ) ஆகியவற்றை தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் எழுத அனுமதிக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், விரைவில் அனைத்து மத்திய அரசின் தேர்வுகளும் மாநில மொழிகளிலும் நடத்தப்பட்டும் என நம்புவதாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story