சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!


சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
x
தினத்தந்தி 11 Jun 2023 5:01 AM GMT (Updated: 11 Jun 2023 5:13 AM GMT)

சேலத்தில் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கலச் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார்.

இந்த நிலையில், சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு 1,713 சதுரடி பரப்பில் 4 அடி உயரத்தில் பீடமும், 16 அடி உயரத்தில் முழுஉருவ வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.

அதனை தொடர்ந்து ரூ.96 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பழைய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். புதிய ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரண்டு அடுக்குகளில் பேருந்து நின்று செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 80 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பெறும் வகையில் 100 வணிக கடைகள் மற்றும் லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர் மறுசீரமைப்பு செய்யப்பட்ட நேரு கலையரங்கம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானம், வ.உ.சி. மார்க்கெட், பெரியார் பேரங்காடி ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

நாளை (திங்கட்கிழமை) காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைக்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம் வருகையையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story