நந்தம்பாக்கம் வர்த்தக மைய பணிகளை தலைமைச்செயலாளர் ஆய்வு


நந்தம்பாக்கம் வர்த்தக மைய பணிகளை தலைமைச்செயலாளர் ஆய்வு
x

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரூ.308.75 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை

வர்த்தக மையம்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 9 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.308.75 கோடி மதிப்பீட்டில் 4 ஆயிரம் நபர்கள் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம் மற்றும் 5 பொருட்காட்சி அரங்கங்கள், ஆயிரத்து 300 வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்ட பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த கட்டுமான பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வேலையாட்களின் எண்ணிக்கையை அதிகரித்து திட்டப்பணிகளை விரைவுபடுத்தி முடிக்கவும், ஜனவரி 2024-ல் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர் மாநாடு சிறப்புற நடைபெறும் வகையில் இக்கட்டுமானப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்திடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பேரிடர் நிவாரண நிதி

பின்னர் அசோக் நகர் 4-வது அவென்யூவில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் 1.64 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணியையும், மூலதன நிதியில் ரூ.23.45 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித்தொட்டிகளில் 5.29 கிலோ மீட்டர் நீளத்துக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி, அயனாவரம் டேங்க் சாலையில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் ரூ.7.27 கோடி மதிப்பீட்டில் 1,820 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி, ஸ்டீபன்சன் சாலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வெளியேற்றும் தொட்டி அமைக்கும் பணி மற்றும் நீர்வளத்துறையின் சார்பில் ஓட்டேரி நல்லா கால்வாயில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் 10.84 கிலோ மீட்டர் நீளத்துக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, பருவமழைக்கு முன்னதாக இப்பணிகளை முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார், ரெயில்வே கோட்ட மேலாளர் விஷ்வநாத் ஈரியா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story