"அனைவரும் சமம் என்ற திராவிட கொள்கைக்கு கிறிஸ்தவ அமைப்புகள் முன்னோடி" - சபாநாயகர் அப்பாவு


அனைவரும் சமம் என்ற திராவிட கொள்கைக்கு கிறிஸ்தவ அமைப்புகள் முன்னோடி - சபாநாயகர் அப்பாவு
x
தினத்தந்தி 4 Nov 2022 6:45 PM GMT (Updated: 4 Nov 2022 6:45 PM GMT)

“அனைவரும் சமம் என்ற திராவிட கொள்கைக்கு கிறிஸ்தவ அமைப்புகள் முன்னோடியாக திகழ்கிறது” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை கத்தோலிக்க கிறிஸ்தவ மறை மாவட்டத்தின் திருநெல்வேலி சமூக சேவை சங்க பொன் விழா, கே.டி.சி. நகரில் நடைபெற்றது. பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொன்விழா மலரை வெளியிட்டார். தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, பாளையங்கோட்டை மறைமாவட்ட முதன்மை குரு குழந்தை ராஜ் ஆகியோர் பேசினார்கள். விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

திருநெல்வேலி சமூக சேவை சங்கம் கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு சமுதாய பணிகளை அடித்தட்டு மக்களுக்காக செய்து வருகிறது. எல்லோரும் கல்வி கற்க வேண்டும், சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் சமம் என்ற நோக்கில் இந்த தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து வந்த கிறிஸ்தவ மிஷனரிகள், கிறிஸ்தவர்களை மட்டும் கல்வி கற்க வைக்காமல் அனைத்து மதத்தினரையும் கல்வி கற்க வைத்தனர். அனைவருக்கும் கல்வி சாலைகளை உருவாக்கி கொடுத்தனர். பாளையங்கோட்டையில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளை உருவாக்கினர். பார்வையற்றோர் பள்ளி உள்பட மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு பள்ளிகளை உருவாக்கினர். இதனால்தான் பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று கூறப்படுகிறது.

இந்த சமுதாய பணி செய்பவர்களுக்கு இடையூறு செய்பவர்களை பொதுமக்கள் தட்டி கேட்க வேண்டும். அனைவரும் சமம் என்ற திராவிட கொள்கைக்கு கிறிஸ்தவ அமைப்புகள் முன்னோடியாக திகழ்கிறது. சிலர் சாதி மற்றும் மதத்தின் பெயரால் பிரிவினையை உருவாக்க நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் திருநெல்வேலி சமூக சேவை சங்க முன்னாள் இயக்குனர்கள் அந்தோணி குரூஸ் அடிகளார், லாரன்ஸ், மோட்சராஜன், சேவியர் கலைமனைகளின் அதிபர் ஹென்றி ஜெரோம் மற்றும் பங்குதந்தைகள், அருட்சகோதரிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். விழாவில் சமூக சேவை சங்க பணியாளர் துரைராஜ் பொன் விழா அறிக்கை வாசித்தார். திருநெல்வேலி சமூக சேவை சங்க இயக்குனர் அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் வரவேற்றார். சரணாலயம் இயக்குனர் ஞான தினகரன் நன்றி கூறினார்.


Next Story