மீஞ்சூரில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


மீஞ்சூரில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x

மீஞ்சூரில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர், பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 அளவில் தீடீரென மீஞ்சூர் சுற்றுவட்டாரங்களில் மின்தடை செய்யப்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கர்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள் பெரும் அவதி அடைந்தனர். மேலும் மின்தடை குறித்து மின்வாரி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க செல்போனில் தொடர்பு கொண்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மீஞ்சூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றனர். இதையடுத்து தீடீரென மின்வாரியத்தில் அருகே உள்ள திருவொற்றியூர்- பொன்னேரி நெடுஞ்சாலையில் நின்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய உதவி பொறியாளர் மற்றும் மீஞ்சூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்தடை ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்து தடையில்லாமல் மின் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் மீஞ்சூர் சுற்றுவட்டாரங்களுக்கு அதிகாலை 3 மணிக்கு மின் வினியோகம் செய்யப்பட்டது. இந்த மின்தடையால் மிஞ்சூரை சுற்றியுள்ள கிரமங்கள் அனைத்தும் இருளில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story