சவப்பெட்டியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி: மயங்கி விழுந்த 2 பெண்களை காப்பாற்றிய மீனவர்

சவப்பெட்டியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியான சம்பவத்தில் மேலும் 2 பெண்கள் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தனர். அவர்களை முதலுதவி சிகிச்சை அளித்து மீனவர் காப்பாற்றியது தற்போது தெரியவந்துள்ளது.
சவப்பெட்டியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி: மயங்கி விழுந்த 2 பெண்களை காப்பாற்றிய மீனவர்
Published on

திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் சாலையை சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா (வயது 16). இவர், ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கடந்த வாரம் காது வலிக்காக திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அபிநயாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாணவி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் மதியம் மாணவி அபிநயாவின் உடல் இறுதி சடங்கிற்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது மாணவியின் உடல் வைக்கப்பட்டு இருந்த குளிர்சாதன சவப்பெட்டியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதில் அருகில் நின்று கொண்டு இருந்த மாணவியின் உறவினரான காசிமேட்டை சேர்ந்த அஜித் (19) உள்பட 20 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அஜித் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பெண்கள் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தனர்.

இதனால் அருகில் இருந்தவர்கள் பதட்டம் அடைந்தனர். அப்போது உறவினரான புதுச்சேரி பனித்திட்டு பகுதியைச்சேர்ந்த ரவீந்திரன் (26) என்பவர் முதலுதவி சிகிச்சை அளித்து 2 பெண்ணின் உயிரையும் காப் பாற்றிய தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

மின்சாரம் தாக்கியதில் சவுமியா, சுந்தரி உள்ளிட்டோர் மயங்கி விழுந்ததும் அவர்களை உடனடியாக வீட்டில் உள்ள மற்றொரு அறைக்கு தூக்கிச்சென்ற ரவீந்திரன், வாய்மூலம் மூச்சுக்காற்றை ஊதியதாக தெரிகிறது. அதன்பிறகு முதலுதவி சிகிச்சை அளித்ததும் அவர்கள் நிலைமை ஓரளவு சீரானது. பின்னர் இருவரும் ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரவீந்திரன் இறந்து போன அபிநயாவின் நெருங்கிய உறவினர் ஆவார். மாணவி இறந்த சோகத்திலும் விரைந்து செயல்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்த ரவீந்திரனை உறவினர்கள் பாராட்டினர். மீனவரான இவர், கடல் தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும்போது செய்யும் முதல் உதவிகளை பார்த்து தானும் செய்ததாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com