திருவள்ளூரில் ரூ.33 கோடியில் புதிய பஸ் நிலைய கட்டிடம் - கலெக்டர் அடிக்கல் நாட்டினார்
திருவள்ளூரில் ரூ.33 கோடியில் புதிய பஸ் நிலைய கட்டிட பணியை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட வேடங்கிநல்லூர் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.33 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன பஸ் நிலைய கட்டிடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது:-
திருவள்ளூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த திருவள்ளூர் நகராட்சிக்கு புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. திருவள்ளூர் நகராட்சி பஸ் நிலையம் என்பது தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்கவும், எம்.எல்.ஏ.களின் கோரிக்கை அடிப்படையிலும் இந்த புதிய பஸ் நிலைய கட்டுமான பணிக்காக ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது.
இந்த பணிகள் 15 மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த பஸ் நிலையம் திருவள்ளூர் நகராட்சியின் வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம். பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்தும், அதே நேரத்தில் உறுதியாகவும், தரமான முறையில் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பாகவும், திருவள்ளூர் நகராட்சி சார்பாகவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா, உள்பட பலர் கலந்துகொண்டனர்.