வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மகாபாரதி ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மகாபாரதி ஆய்வு
x
தினத்தந்தி 7 July 2023 12:15 AM IST (Updated: 7 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு

ஆக்கூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.5 லட்சத்தில் தாமரைக்குளம் தூர்வாரும் பணி மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அரசு மேல்நிலைப்பள்ளியில் சமையல் கூடத்திற்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவுக்காக சமைக்கப்படும் அரிசி, பருப்பு, கொண்டக்கடலை, பாசிப்பருப்பு ஆகியவற்றின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளி மாணவ-மாணவிகளின் கற்றல் திறன்களை கேட்டு அறிந்தார். பின்னர் அங்கு உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்றும் பார்வையிட்டார்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற மாவட்ட கலெக்டர் சித்த மருத்துவப் பிரிவில் போதிய மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளதா, சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வந்திருந்த கர்ப்பிணி பெண்களிடம் அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார். தொடர்ந்து ஆக்கூர் முக்கூட்டு சின்னங்குடி சாலையில் ரூ.5.62 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் பணியை பார்வையிட்டார்.

விலைப்பட்டியல்

மேலும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று அரசு நிர்ணயிக்கும் விலையில் மதுபானம் விற்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு விலைப்பட்டியல் இல்லாமல் இருந்ததால் உடனடியாக விலைப்பட்டியல் வைக்க டாஸ்மாக் ஊழியரிடம் அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து கிடங்கள் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளிடம் புத்தகத்தை பார்த்து படிக்க சொல்லி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் உடன் இருந்தனர்.


Next Story