மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு


மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
x

கரூர் மாவட்டத்தில் ஜமாபந்தி தொடங்கியது. இதில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.

கரூர்

ஜமாபந்தி

1432-ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் என்ற ஜமாபந்தி நேற்று கரூர் மாவட்டத்தில் தொடங்கியது. இதில் புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தகுதியுடைய நபர்களுக்கு உடனுக்குடன் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட புகளூர், கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கடவூர் மற்றும் மண்மங்கலம் ஆகிய வட்டங்களை சேர்ந்த 203 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி மாவட்ட கலெக்டர் தலைமையில் ஜூன் 6, 7, 8 ஆகிய தேதிகளில் புகளூர் வட்டத்திலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஜூன் 6, 7, 8 ஆகிய தேதிகளில் கடவூர் வட்டத்திலும், கரூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஜூன் 6, 7, 8 ஆகிய தேதிகளில் மண்மங்கலம் வட்டத்திலும் நடைபெற உள்ளது.

மனுக்களை அளித்து பயன்பெறலாம்

இதேபோல் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஜூன் 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் கிருஷ்ணராயபுரம் வட்டத்திலும், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தலைமையில் ஜூன் 6, 7, 8, 9 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அரவக்குறிச்சி வட்டத்திலும், கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் ஜூன் 6, 7, 8, 9 மற்றும் 13 ஆகிய தேதிகளில் குளித்தலை வட்டத்திலும், கரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் ஜூன் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கரூர் வட்டத்திலும் அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் நடத்தப்படும்.

வருடத்திற்கு ஒருமுறை அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. ஜமாபந்தி பொதுமக்களின் நில உடைமைகளை உறுதி செய்வதற்காக நடைபெற்று வருகின்றது. அந்தந்த கிராமங்களின் வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு பட்டா மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கும் நபர்களின் பெயர்கள் பதிவேடுகளில் உள்ளனவா? என்பதையும், பயிர் கணக்குகள் உள்ளிட்டவைகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. எனவே பொதுமக்கள் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட கோரிக்கை மனுக்களை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

புகளூர் வட்டத்திற்கு உட்பட்ட 27 வருவாய் கிராமங்களில் நேற்று தென்னிலை குறுவட்டத்திற்கு உட்பட்ட அஞ்சூர், துக்காச்சி, தென்னிலை மேல்பாகம், தென்னிலை தென்பாகம், தென்னிலை கீழ்பாகம், கார்வழி, மொஞ்சனூர் மேல்பாகம், மொஞ்சனூர் கீழ்பாகம், எல்லைக்காடு, ராமச்சந்திரபுரம் ஆகிய 9 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 77 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் வருவாய்த்துறையின் மூலம் 5 பேருக்கு பட்டாவும், 3 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவும், 10 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை திருத்தமும் என மொத்தம் 18 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டரால் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், புகளூர் தாசில்தார் முருகன், மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான அலுவலர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். ஜமாபந்தி நிகழ்ச்சி தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. கடைசி நாள் மதியம் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணும் வகையில் குடிகள் மாநாடு நடைபெறுகிறது.


Next Story