

விழுப்புரம்
கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மாவட்ட கலெக்டர் சி.பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வேளாண் பொருட்களின் வருகை, இருப்பு, விலைப்பட்டியல் விவரம், விளைபொருட்களுக்கான பட்டியல், விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவரம் போன்றவை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
விழுப்புரம் நகராட்சியில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 2 ஆயிரம் மெ.டன் கொள்ளளவு கொண்ட வேளாண் விளைபொருட்கள் இருப்பு வைப்பதற்கும், 5 ஆயிரம் மெ.டன் விளைபொருட்கள் பரிவர்த்தனை செய்வதற்கான இடவசதியுடன் இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் 800 முதல் ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொண்டு வந்து பயன்பெறுகின்றனர்.
விலைப்பட்டியல்
இதில் 80 வியாபாரிகள், தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்செல்கின்றனர். மின்னணு பரிவர்த்தனை முறையில் ஜனவரி மாதத்திலிருந்து ஏலம் முறையின் மூலம் வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பனிப்பயறு மற்றும் உளுந்து, பருத்தி, மணிலா போன்ற உற்பத்திப்பொருட்கள் அதிகளவில் வரத்து உள்ளது. விளைபொருட்கள் மின்னணு பரிவர்த்தனை முறையில் விற்பனை செய்யப்பட்டு அதிகபட்சமாக 3 நாட்களுக்குள் அதற்குரிய தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களுக்குண்டான விலைப்பட்டியலை வியாபாரிகள் அறிந்துகொள்ளும் வகையில் மின்னணு விளம்பர பலகை அமைக்கவும், விளைபொருட்கள் வருகை, இருப்பு மற்றும் விற்பனை செய்யப்பட்ட விவரம், அதற்குரிய விலைப்பட்டியல் போன்றவைகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும். விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் வந்து செல்வதால் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்றவைகளை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் ரவி, கண்காணிப்பாளர் செல்வம் உள்பட பலர் உடன் இருந்தனர்.