வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா நேரில் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா நேரில் ஆய்வு
x

வெண்ணந்தூர் பேரூராட்சி மற்றும் நடுப்பட்டி, செம்மாண்டப்பட்டி ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் உமா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்

வளர்ச்சி திட்ட பணிகள்

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், செம்மாண்டப்பட்டி ஊராட்சியில் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் செம்மாண்டப்பட்டி முதல் நடுப்பட்டி வரை ஏரிக்கரை மீது தார்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் தரமான முறையில் சாலையை அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் நடுப்பட்டி ஊராட்சி, செம்மாண்டப்பட்டியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் தற்போதைய நிலை, பணி முன்னேற்றம் ஆகியவை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

பின்னர் செம்மாண்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் வருகை குறித்தும், தொடக்கப்பள்ளியில் குடிநீர் வசதி, வகுப்பறை கட்டிடங்கள் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து செம்மாண்டப்பட்டி குழந்தைகள் மையத்தில் வருகை தரும் குழந்தைகள் எண்ணிக்கை, குழந்தைகள் வளர்ச்சி விகிதம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை விரிவாக கேட்டறிந்தார்.

கலெக்டர் ஆய்வு

மேலும் வெண்ணந்தூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சி மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை, கழிவறை மற்றும் வாகன நிறுத்தும் இடம் அமைக்கும் பணிகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வெண்ணந்தூர் பேரூராட்சி கடைவீதி மற்றும் சந்தையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் தங்கம்மாள், வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், வனிதா, பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story