கோயம்பேடு அருகே பட்டா கத்திகளுடன் சிக்கிய கல்லூரி மாணவர் - ரூட் தல பிரச்சினையா? போலீசார் விசாரணை


கோயம்பேடு அருகே பட்டா கத்திகளுடன் சிக்கிய கல்லூரி மாணவர் - ரூட் தல பிரச்சினையா? போலீசார் விசாரணை
x

கோயம்பேடு அருகே பட்டா கத்திகளுடன் சிக்கிய கல்லூரி மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை

சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டர் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோயம்பேடு போலீசாரை கண்டதும் கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து கலைந்து ஓட ஆரம்பித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த மாணவர்களை விரட்டிச்சென்றனர்.

அதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட மாணவரிடம் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் 4 பட்டா கத்திகள் இருப்பது தெரியவந்தது. அந்த மாணவனை கோயம்பேடு போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் வெற்றிவேல் (வயது 19) என்பதும், பட்டாகத்திகள் இருந்த பையை அவரது நண்பர் கொடுத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. நேற்று பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் பச்சையப்பர் 229-வது நினைவு விழா மற்றும் தமிழ் பசுமை தோட்டம் தொடக்க விழாவில் மரம் நடும் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்ட மாணவர்கள் வீட்டுக்கு திரும்பும்போது பட்டா கத்தியுடன் சிக்கியதும் தெரிந்தது. மாணவர் வெற்றிவேலை கைது செய்த போலீசார், ரூட் தல பிரச்சினையில் சக கல்லூரி மாணவர் யாரையாவது வெட்டுவதற்காக கத்தி வைத்திருந்தாரா? என்ற கோணத்தில் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story