ரெயில் முன்பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை


ரெயில் முன்பாய்ந்து  கல்லூரி மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 22 April 2023 6:45 PM GMT (Updated: 22 April 2023 6:46 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர் தற்கொலை

ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நேற்று ஒரு வாலிபர் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும், தண்டவாள பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளும் நின்றது. பின்னர் இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சப்-இன்ஸ்பெக்டர்கள் பாபு, பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதலில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் நாகர்கோவில் புன்னைநகரை சேர்ந்த சகாயசிம்சன் மகன் ஷனீஸ் (வயது 26) என்பதும், இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு

மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசாரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

தற்கொலை செய்த ஷனீசின் தாயார் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பிறகு அவரது தந்தையும் இறந்துவிட்டார். இதனால் ஷனீஸ் அவரது உறவினர் ஒருவரின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அவர் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

மேலும் அவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தையும் இழந்ததாக நண்பர்கள் கூறினர். இருப்பினும் அவர் தொடர்ந்து ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, ஆன்லைனில் பணத்தை இழந்த மனவேதனையில் ஷனீஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மேலும் ஷனீசின் நண்பர்கள், உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகே தற்கொலைக்கான காரணம் உறுதியாக தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கதறி அழுத நண்பர்கள்

இதற்கிடையே ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஷனீசின் உடல் வைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டு ஷனீசின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

ரெயில் முன்பாய்ந்து மாணவர் தற்கொலை செய்த சம்பவம் குமரியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story