நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்


நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்
x

கோப்புப்படம்

இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்தநிலையில் நடிகர் போண்டா மணி உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை பொழிச்சலூரில் நடிகர் போண்டா மணி குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது 2 சிறுநீரகமும் செயலிழந்தநிலையில் நடிகர்கள் அவருக்கு உதவி செய்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்தநிலையில் அவர் உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் போண்டா மணியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை பொழிச்சநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

1991ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் 'பவுனு பவுனுதான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் போண்டா மணி. தொடர்ந்து பொன்விலங்கு, பொங்கலோ பொங்கல், சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா, வசீகரா உள்ளிட்ட 250 திரைப்படங்களுக்கு மேல் நடிகர் போண்டா மணி நடித்துள்ளார்.மேலும் ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் அவர் நடித்துள்ளார்.


Next Story