10-ம் வகுப்பு தேர்வுகள் நிறைவு; உற்சாகமாக கொண்டாடிய மாணவ- மாணவிகள்செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

10-ம் வகுப்பு தேர்வுகள் நிறைவுபெற்றதால் மாணவ- மாணவிகள் உற்சாகமாக கொண்டாடினர்
10-ம் வகுப்பு தேர்வுகள் நேற்று நிறைவடைந்ததை மாணவ- மாணவிகள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
தேர்வு நிறைவு
தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கின. இந்த தேர்வு நேற்று நிறைவடைந்தது. நேற்று கடைசி தேர்வை எழுதிய மாணவ- மாணவிகள் தங்கள் தேர்வு மையங்களில் இருந்து உற்சாகமாக வெளியே வந்தனர். தேர்வு அறை வளாகத்துக்கு வெளியே வந்த மாணவ- மாணவிகள் தங்கள் நண்பர்கள் தோழிகளிடம் சென்று உற்சாகமாக பேசினார்கள். அடுத்த ஆண்டு பிளஸ்-1 வகுப்பில் சந்திப்போம் என்று சிலர் பிரிய நினைத்தாலும், பேனா மையை வீசி அடித்து என்னை மறந்து விடாதே என்று உசுப்பேற்றி விட்டனர். ஒவ்வொரு பகுதியாக தொடங்கிய இந்த கலாட்டா நேற்று ஈரோட்டில் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் விரிவடைந்தது.
செல்பி
ஹே... பொதுத்தேர்வு முடிந்து விட்டது என்று ஒருபுறம் மாணவர்கள் துள்ளிக்குதிக்க, மாணவிகள் தங்களை அழைத்துச்செல்ல வந்த பெற்றோரிடம் இருந்து செல்போன்களை வாங்கி தங்கள் தோழிகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். விளையாட்டு உற்சாகமாகி, எல்லை கடந்து சில மாணவர்கள் சட்டைகளை கிழித்துக்கொண்டு செல்லும் நிலையும் ஏற்பட்டது. ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் தேர்வு முடிந்த மகிழ்ச்சியை வீடு செல்லும்வரை கொண்டாடி தீர்த்தனர்.