பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காரில் கடத்த முயன்ற 230 கிலோ குட்கா பறிமுதல்டிரைவர் கைது


பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காரில் கடத்த முயன்ற 230 கிலோ குட்கா பறிமுதல்டிரைவர் கைது
x
தினத்தந்தி 31 May 2023 5:00 AM GMT (Updated: 31 May 2023 5:01 AM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக மதுரைக்கு காரில் கடத்த முயன்ற 230 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

குட்கா கடத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா கடத்தலை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக காரில் குட்கா கடத்துவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், பாகலூர் அருகே கக்கனூர் சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 230 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள வராகசந்திரத்தைச் சேர்ந்த சின்னராஜ் (வயது28) என்பது தெரியவந்தது.

கைது-பறிமுதல்

மேலும் இவா் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக மதுரைக்கு குட்காவை கடத்த முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார், டிரைவரை கைது செய்தனர். மேலும் காருடன், ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story