ஒரே நடைமேடையில் நிறுத்தப்படும் 2 ரெயில்களால் பயணிகளிடையே குழப்பம்


ஒரே நடைமேடையில் நிறுத்தப்படும் 2 ரெயில்களால் பயணிகளிடையே குழப்பம்
x
தினத்தந்தி 31 Oct 2022 6:45 PM GMT (Updated: 31 Oct 2022 6:47 PM GMT)

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ஒரே நடைமேடையில் நிறுத்தப்படும் 2 ரெயில்களால் பயணிகளிடையே குழப்பம் ரெயிலை தவற விடுவதாகவும் புலம்பல்

விழுப்புரம்

விழுப்புரம்

குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் இருப்பதுடன் உடல் அலுப்பே இல்லாமல் பயணம் செய்ய எளிதாக இருப்பதால் பொதுமக்கள் பெரும்பாலானோர் பஸ் பயணத்தை விட ரெயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற ரெயில் நிலையங்களுக்கு அடுத்தபடியாக முக்கிய சந்திப்பாகவும் விளங்கி வருவது விழுப்புரம் ரெயில் நிலையம். இந்த ரெயில் நிலையம் வழியாக மொத்தம் 117 ரெயில்கள் சென்று வருகின்றன. இவற்றில் திருப்பதி, புருலியா, கரக்பூர் உள்ளிட்ட 6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், புதுச்சேரி, தாம்பரம், மயிலாடுதுறை, மதுரை, சென்னை எழும்பூர், மேல்மருவத்தூர், காட்பாடி உள்ளிட்ட பயணிகள் ரெயில்கள் என 14 ரெயில்கள் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு 6 நடைமேடைகள் உள்ளன. இந்த ரெயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் விழுப்புரம் ரெயில் நிலையம் எந்நேரமும் பரபரப்பாகவும், பயணிகள் கூட்டம் மிகுந்தும் காணப்படுகிறது.

திருப்பதி ரெயில்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் திருப்பதி செல்ல வேண்டுமெனில் பஸ் பயணத்தை விட ரெயிலில் பயணம் செய்வதிலேயே அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். இவர்களின் வசதிக்காக விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 5.30 மணி, காலை 11 மணி, மாலை 5.20 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்பட்டு திருப்பதியை சென்றடைகிறது. இதுதவிர புதுச்சேரியில் இருந்து விழுப்புரம், அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக தினமும் திருப்பதிக்கு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்களில் திருப்பதி செல்ல ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். சாதாரண நாட்களிலேயே இந்த ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். மேலும் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மன்னார்குடி- திருப்பதி செல்லும் பாமினி எக்ஸ்பிரஸ், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் ராமேஸ்வரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயிலும் விழுப்புரம் வழியாக இயக்கப்படுகிறது.

கடைசி பகுதியில் நிறுத்தம்

இந்நிலையில் தற்போது விழுப்புரம் ரெயில் நிலையத்தில் உள்ள 5, 6-வது நடைமேடைகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் பெரும்பாலான ரெயில்களை அந்த நடைமேடைகளில் உள்வாங்க முடியவில்லை. இதனால் மற்ற 4 நடைமேடைகளில்தான் ரெயில்கள் அனைத்தும் உள்வாங்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக ரெயில்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் கடந்த சில மாதங்களாக மாலை 5.20 மணிக்கு திருப்பதி செல்லக்கூடிய ரெயில் விழுப்புரம் ரெயில் நிலைய நடைமேடையில் கடைசி பகுதியில் நிறுத்தி வைக்கப்படுகிறது. நடைமேடை முடியும் இடத்தின் அருகில் உள்ள சிக்னல் கம்பத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் நிறுத்தப்படுகிறது.

பயணிகள் கடும் அவதி

இதனால் பயணச்சீட்டு எடுக்கும் மையத்தில் இருந்து பயணச்சீட்டு எடுத்துவிட்டு சுமார் 1 கிலோமீட்டர் தூரம் சுற்றி நடந்து சென்று ரெயில் ஏறும் நிலைமை உள்ளது. இதன் காரணமாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ரெயில் ஏற முடியாமல் சிரமப்படுகின்றனர். பல நேரங்களில் ரெயிலையும் தவற விட்டுவிடுகின்றனர்.

அதுமட்டுமின்றி ஒரே நடைமேடையில் திருப்பதி செல்லும் ரெயிலையும் (வடக்கு நோக்கிய திசையை பார்த்து), மயிலாடுதுறை ரெயிலையும் (தெற்கு நோக்கிய திசையில்) நிறுத்தி விடுகின்றனர். ஒலிப்பெருக்கியிலும் ஒரு நடைமேடையை குறிப்பிட்டு முதலில் திருப்பதி ரெயில் நிற்பதாகவும், அடுத்த சில நிமிடங்களில் அதே நடைமேடையில் மயிலாடுதுறை ரெயில் நிற்பதாகவும் அறிவிப்பதால் எந்த ரெயில் எந்தெந்த நடைமேடைகளில் நிற்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியாமல் பயணிகள் பெரும் குழப்பம் அடைகின்றனர். இந்த குழப்பத்தை போக்கவும், பயணிகளின் சிரமத்தை போக்கவும் ரெயில் நிலைய நடைமேடைகளில் சரியான இடத்திலேயே திருப்பதி ரெயிலை நிறுத்தி வைக்க தெற்கு ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரும் குழப்பம்

இதுகுறித்து விழுப்புரம் அருகே வெள்ளேரிப்பட்டை சேர்ந்த செந்தில்குமார் கூறுகையில், நான் மாதந்தோறும் திருப்பதி கோவிலுக்கு செல்வேன். விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு புறப்படும் ரெயில் பெரும்பாலான சமயங்களில் 4, 5-வது நடைமேடைகளில்தான் நிற்கும். நாங்கள் பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு 3 நடைமேடைகளை கடந்து அங்கு நடந்து செல்வதற்கே சிரமமாக இருக்கும். இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக நடைமேடைகளில் கடைசி பகுதியில் கொண்டு ரெயிலை நிறுத்துகிறார்கள். ஒலிப்பெருக்கி மூலம் 4-வது நடைமேடையில் திருப்பதி ரெயில் நிற்பதாக அறிவிக்கிறார்கள், அடுத்த சில நொடிகளில் அதே நடைமேடையில் மயிலாடுதுறை பயணிகள் ரெயிலும் நிற்பதாக அறிவிக்கிறார்கள். ஒரே நடைமேடையில் அதுவும் ஒரே நேரத்தில் 2 ரெயில்கள் நிற்பதாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும் அறிவிப்பினால் எங்களுக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. ஒரே நடைமேடையில் மயிலாடுதுறை ரெயில் தெற்கு நோக்கிய திசையிலும், திருப்பதி ரெயில் வடக்கு நோக்கிய திசையிலும் நிற்கிறது. இது தெரியாமல் மயிலாடுதுறை ரெயில் நிற்பதை பார்த்துவிட்டு அந்த ரெயில் புறப்பட்ட பின்னர் திருப்பதி ரெயில் வரும் என்று பல மணி நேரம் காத்திருக்கிறோம். அப்படியே வெகுநேரம் கழித்து தெரிந்துகொண்டாலும் அவசர, அவசரமாக திருப்பதி ரெயிலை பிடிப்பதற்குள் ரெயில் புறப்பட்டுச்செல்கிறது. பயணச்சீட்டு எடுக்கும் இடத்தில் இருந்து திருப்பதி ரெயில் நிற்கும் இடத்திற்கு செல்வதற்கு சுமார் 1 கி.மீ. தூரம் உள்ளது. இதனால் மிகவும் சிரமமாக இருக்கிறது. பல சமயங்களில் ரெயிலை தவற விடுகிறோம் என்றார்.

சிரமமாக இருக்கிறது

அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் கூறும்போது, விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு பஸ்சில் செல்வதற்கு குறைந்தது 8 மணி நேரம் வரை ஆகும். பஸ்சில் சென்று திருப்பதி இறங்குவதற்குள் உடலும் அசதியாகி விடுகிறது. இதனால்தான் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகிறோம். விழுப்புரத்தில் இருந்து மாலை 5.30 மணியளவில் புறப்படும் ரெயிலில் ஏறினால் இரவு 11 மணிக்கெல்லாம் திருப்பதி சென்று விடுவோம். மறுநாள் காலை விரைவாகவே சாமி தரிசனம் செய்துவிட்டு விழுப்புரம் வருவதற்கும் ரெயில் பயணம் வசதியாக இருக்கிறது. ஆனால் திருப்பதிக்கு சென்று வரும் சிரமத்தை விட விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு திருப்பதி ரெயில் நிற்கும் இடத்திற்கு செல்ல மிகவும் சிரமமாக இருக்கிறது. நடைமேடையில் கடைசி பகுதியில் நிற்பதால் உடைமைகளை தூக்கிக்கொண்டு வெகுதூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் வயதானவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். பல சமயங்களில் ரெயிலையும் தவற விட்டுவிடுகிறோம். இங்கு லிப்ட் வசதிக்கான பணிகள் நடக்கிறது. அப்பணியை விரைந்து முடித்தால் பயனுள்ளதாக இருக்கும். அதுபோல் 5, 6-வது நடைமேடைகளில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளையும் விரைந்து முடித்தால் அந்த நடைமேடைகளில் சில ரெயில்களை உள்வாங்கி அனுப்புவார்கள். இதனால் இதுபோன்ற சிரமங்கள் ஏற்படாது. எங்களின் சிரமத்தை போக்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story