காளையார்கோவில் அருகே புனித சூசையப்பர் ஆலய அர்ச்சிப்பு விழா
காளையார்கோவில் அருகே சூசையப்பர்பட்டணத்தில் புனித சூசையப்பர் ஆலயத்தில் அர்ச்சிப்பு விழா நடந்தது.
காளையார்கோவில்,
காளையார்கோவில் அருகே சூசையப்பர்பட்டணத்தில் புனித சூசையப்பர் ஆலயத்தில் அர்ச்சிப்பு விழா நடந்தது.
புனித சூசையப்பர் ஆலயம்
சிவகங்கை மறை மாவட்டத்திலுள்ள பழமையான பங்குகளில் சூசையப்பர் பட்டணமும் ஒன்றாகும். இங்கு 1715-ம் ஆண்டு முதலே மறைபோதகப் பணிகள் நடைபெற்றன.. திருச்சபை சட்ட விதிகளின்படி 1934-ல் சூசையப்பர்பட்டணம் தனிப்பெரும் பங்காக உயர்த்தப்பட்டது.
1839-ல் பிரான்சில் இருந்து மதுரை மிசனுக்கு பணி செய்ய வந்த அலெக்ஸில் கானோச் சேசுசபை பாதிரியார் இவ்வூரில் ஆலயம் கட்ட 100 ரூபாய் நன்கொடை கொடுத்து சூசையப்பர்பட்டணத்தில் புதிய ஆலயம் கட்ட உதவி செய்தார். 1940-ல் பாதிரியார் தூர் ஆலயத்தை விரிவுப்படுத்தினார். 1950-ல் பாதிரியார் வேதமுத்துவால் ஆலய கோபுரம் உருவாக்கப்பட்டது. மேலும் பாதிரியார் ஜோசப் சேவியரால் 1972-ல் திருப்பலி பீடம் அமைக்கப்பட்டது. மதுரை உயர்மறை மாவட்டத்தில் 1987-ம் ஆண்டுவரை பல்வேறு வளர்ச்சிகளை கண்டது.
இப்பங்கானது சாத்தரசன்பட்டி, ஆண்டிச்சியூரணி, பள்ளித்தம்மம், காளையார்கோவில் போன்ற பங்குகளின் தாய்ப்பங்காகும். இப்பங்கு தற்போது காட்டாத்தி, சானாவூரணி, அரசகுளம், வேலாங்குளம் என்ற 4 கிளைக் கிராமங்களைக் கொண்டுள்ளது.
அர்ச்சிப்பு விழா
சூசையப்பர்பட்டணம் புனித சூசையப்பர் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் கொடி ஏற்றி மே மாதம் முதல் சனி, ஞாயிற்றுக்கிழமையில் திருவிழா நடைபெறும்.
இந்த நிலையில் பழைய ஆலயம் புதுப்பிக்கப்பட்டு ஆயர் ஸ்டீபன் அந்தோணியால் அர்ச்சிப்பு செய்யப்பட்டு திறப்புவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மறைமாவட்ட முதன்மை குரு, மறைமாவட்ட பொருளாளர் பாதிரியார் மற்றும் குருக்கள், சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு சூசையப்பர்பட்டணம் புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலியுடன் புது நன்மை மற்றும் உறுதிபூசுதல் நடைபெறும்.
விழாவிற்கு சிவகங்கை மாவட்ட மேனாள் ஆயர் செ.சூசைமாணிக்கம் மற்றும் அருட்தந்தையர்கள் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை, கிராம கமிட்டி, கிராம மக்கள் மற்றும் இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.