திருத்தணி முருகன் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி நிறைவு: வாசற்கால் தூண்களில் சிற்ப வேலைபாடுகள் தீவிரம்


திருத்தணி முருகன் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி நிறைவு: வாசற்கால் தூண்களில் சிற்ப வேலைபாடுகள் தீவிரம்
x

திருத்தணி முருகன் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில், வாசற்கால் தூண்களில் சிற்ப வேலைபாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர்

முருகனின் பிரசித்தி பெற்ற 5-ம் படை வீடாக திகழ்வது திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோவில். இக்கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உட்பட பல மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் முருகன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்கும் பணி கடந்த 2009-ம் ஆண்டு இந்து அறநிலையத்துறை அனுமதியுடன் துவங்கப்பட்டது. 2011-க்குள் முடிக்க திட்டமிட்டிருந்த ராஜகோபுர பணிகள், பல பிரச்சினைகளால் கிடப்பில் போடப்பட்டன. இதையடுத்து 7 ஆண்டுகளுக்கு பின் 2017-ம் ஆண்டு ராஜகோபுர பணி மீண்டும் துவங்கியது.

இந்நிலையில் ராஜகோபுரம் கட்டும் பணிகள் நிறைவடைந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனை அடுத்து கோபுரம் நுழைவு வாயிலில் வாசற்கால் தூண் அமைக்கும் பணி மற்றும் ராஜகோபுரத்தையும், மாடவீதியையும் இணைக்கும் வகையில் ரூ.92 லட்சம் செலவில் 56 படிகள் அமைக்கும் பணியை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து ராஜகோபுரத்தையும், மாடவீதியையும் இணைக்கும்படி பாதைகளை மண் நிரப்பி சமன் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. பின்னர் அடுத்தக்கட்டமாக வாசற்கால் தூண்கள் அமைக்கும் பணி நடைபெறாமல் இருந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாவது:- முருகன் கோவிலின் 9 நிலை இராஜகோபுரத்தின் இருபுறமும் 30 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கருங்கற்கலால் ஆன 2 வாசற்கால் தூண்கள் நன்கொடை மூலம் கடந்தாண்டு மலைக்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. வாசற்கால் தூணிண் உறுதித் தன்மை குறித்து அண்ணா பல்கலைக்கழக கட்டிட வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் ஒரு வாசற்கால் தூணின் உறுதி தன்மையில் சில ஐயப்பாடுகள் ஏற்பட்டதால் ராஜகோபுரத்தில் வாசற்கால் தூண் பொருத்தப்படாமல் இருந்தது.

இதனையடுத்து நன்கொடை மூலம் கர்நாடக மாநிலத்தில் இருந்து ராஜகோபுரத்தின் நுழைவுப் பகுதியில் பொருத்துவதற்கு தேவையான மற்றொரு வாசற்கால் தூண் தேர்வு செய்யப்பட்டு மலைக் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.

தற்போது வாசற்கால் தூண்களில் சிற்ப வேலைபாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சிற்ப வேலைப்பாடுகள் முடிந்ததும் ஆணையரின் உத்தரவு பெற்று ராஜகோபுரத்தின் இருபுறங்களின் வாசற்கால் தூண்கள் பொருத்தப்படும், பின்னர் ராஜகோபுரத்தையும் மாடவீதியை இணைக்கும் படிகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என தெரிவித்தனர்.


Next Story