நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை மூடப்பட்டது
தக்காளி, சின்னவெங்காயம், இஞ்சி இல்லாததால் மயிலாடுதுறையில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மயிலாடுதுறை;
தக்காளி, சின்னவெங்காயம், இஞ்சி இல்லாததால் மயிலாடுதுறையில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தக்காளி, சி்ன்னவெங்காயம்
தமிழகத்தில் தக்காளி வரத்து குறைவு காரணமாக அதன் விலை ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைப்போல சின்ன வெங்காயமும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் மயிலாடுதுறை நாராயண பிள்ளை சந்தில் அமைந்துள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலையில் நேற்றுமுன்தினம் கூட்டுறவுத் துறையின் சார்பில் குறைந்த விலைக்கு தக்காளி, சின்ன வெங்காயம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.மேலும் இந்த கடையில் இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விற்பனையும் தொடங்கியது. எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். குறைந்த விலைக்கு தக்காளி, சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்படுவது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை நகர மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்களும் நேற்று கூட்டுறவு பண்டக சாலையை அணுகினர்.
கடையை பூட்டினர்
ஆனால் நேற்று காலை முதலே தக்காளி, சின்ன வெங்காயம் இருப்பில் இல்லாததால், கடை ஊழியர்கள் பொது மக்களிடம் இருப்பு இல்லை என கூறி திருப்பி அனுப்பினர். மேலும் இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் உள்ளிட்ட எந்த பொருளும் இருப்பில் இல்லை. ஒருகட்டத்தில் பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியாத ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வெளியேறினர். திட்டம் தொடங்கிய மறுநாளே தக்காளி, சின்ன வெங்காயம் குறைந்த விலைக்கு கிடைக்காததாலும் கடை பூட்டி இருந்ததாலும் பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-தற்போது காய்கறிகள் இருப்பில் இல்லாததால் கடை மூடப்பட்டுள்ளது. மாலை காய்கறிகள் வந்தவுடன் மீண்டும் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினா்.