குன்றத்தூரில் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்த கன்டெய்னர் லாரி - 25 மின்சார மோட்டார் சைக்கிள்கள் சேதம்


குன்றத்தூரில் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்த கன்டெய்னர் லாரி - 25 மின்சார மோட்டார் சைக்கிள்கள் சேதம்
x

குன்றத்தூரில் கன்டெய்னர் லாரி சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் 25 மின்சார மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.

சென்னை

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 25 புதிய மின்சார மோட்டார் சைக்கிள்களை ஏற்றிக்கொண்டு சென்னையை அடுத்த பல்லாவரம் நோக்கி கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சதாசிவா (வயது 23), என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் கிளீனர் சும்மன் (23) இருந்தார்.

நேற்று அதிகாலை தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் கோவூர் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, பைபாஸ் சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

இதில் கன்டெய்னர் லாரியில் இருந்த அனைத்து மின்சார மோட்டார் சைக்கிள்களும் கீழே விழுந்தன. இதை பார்த்ததும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தினார்கள்.

மேலும் கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் 25 மின்சார மோட்டார் சைக்கிள்களும் சாலையில் சிதறி சேதம் அடைந்தன. அவற்றையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் கிளீனர் காயமின்றி உயிர் தப்பினார்கள்.

இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிகாலை நேரம் என்பதாலும் அதிக போக்குவரத்து இந்த சாலையில் இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story