தொடர் கனமழை எதிரொலி... 3 மாவட்டங்களுக்கு விரையும் பேரிடர் மீட்பு குழு


தொடர் கனமழை எதிரொலி... 3 மாவட்டங்களுக்கு விரையும் பேரிடர் மீட்பு குழு
x

ஒரு குழுவுக்கு 25 பேர் என்ற அடிப்படையில் மொத்தம் 100 பேர் இந்த மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

சென்னை,

தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை நீடித்து வருகிறது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

தொடர் மழையால் நெல்லை களக்காடு தலையணை பகுதியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி உபரி நீர் திறக்கப்படுகிறது. அத்துடன் திற்பரப்பு அருவியில் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சுற்றுலாத்தலமான குமரியில் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை பெய்துவருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு குழுவுக்கு 25 பேர் என்ற அடிப்படையில் மொத்தம் 100 பேர் இந்த மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை பணிகளை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story