மனஅழுத்தத்தை போக்க போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை


மனஅழுத்தத்தை போக்க போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மனஅழுத்தத்தை போக்க போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் ஏ.டி.ஜி.பி. அறிவுறுத்தினார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று மாலை தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அருண் திடீரென வருகை தந்தார். அப்போது அங்குள்ள வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, மறைந்த கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதன் பிறகு அவர், விழுப்புரம், காஞ்சீபுரம் சரக போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் உரிய முறையில் பணியாற்ற வேண்டும் என்றார்.

அறிவுரை

மேலும் பணிச்சுமை, மனஅழுத்தத்தை போக்கும் வகையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு அவ்வப்போது உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும், வாரத்தில் ஒரு நாள் போலீசாருக்கு விடுமுறை அளிக்கும் டி.ஜி.பி.யின் உத்தரவை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஏ.டி.ஜி.பி. அருண் அறிவுரை வழங்கினார்.

அப்போது வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன், டி.ஐ.ஜி.க்கள் விழுப்புரம் ஜியாவுல்ஹக், காஞ்சீபுரம் பகலவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் விழுப்புரம் சசாங் சாய், கடலூர் ராஜாராம், கள்ளக்குறிச்சி மோகன்ராஜ், காஞ்சீபுரம் சுதாகர், செங்கல்பட்டு சாய் பிரனீத், திருவள்ளூர் செபாஸ் கல்யாண் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story