சென்னை கேளம்பாக்கம் தனியார் பல்கலைக்கழகத்தில் 74 பேருக்கு கொரோனா


சென்னை கேளம்பாக்கம் தனியார் பல்கலைக்கழகத்தில் 74 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 31 May 2022 1:31 PM IST (Updated: 31 May 2022 1:33 PM IST)
t-max-icont-min-icon

தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு,

சென்னை வண்டலூர் அருகே கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் 25 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறையினர் சார்பில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை வந்த சோதனை முடிவுகளின்படி, பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 39 பேர் மாணவர்கள் என்றும், 35 பேர் மாணவிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தில் உள்ள 3 விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மொத்தம் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவுகள் இன்னும் வர வேண்டி இருப்பதால், பாதிப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story