மாநகராட்சி அதிகாரிகள் தர்ணா
மாநகராட்சி அதிகாரிகள் தர்ணா
திருப்பூர்
திருப்பூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற சென்ற அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
திருப்பூர் மாநகராட்சி சார்பில் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி வருகிறார்கள். ஆக்கிரமிப்பு வீடுகள் அடையாளம் காணப்பட்டு அந்த வீடுகளில் குடியிருப்போருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் பலமுறை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பலர் அந்த வீடுகளில் குடியேறி விட்டனர். ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக திருப்பூர் ராயபுரம் சாயப்பட்டறை வீதி பகுதியில் 142 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர், காவல்துறையினர் சென்றனர். நொய்யல் கரையோரம் ஆண்டிப்பாளையம் வரை சாலை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
அதிகாரிகள் தர்ணா
சாயப்பட்டறை வீதியில் உள்ள 15 வீடுகளை மட்டும் அகற்றுவதற்கு வீட்டு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தாங்கள் அங்கேயே குடியிருப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வேண்டாம். நிலம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நிலம் இல்லை. அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்தும் அவர்கள் வீடுகளை காலி செய்யாமல் இருந்தனர்.
பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகளை அகற்றுவதற்கு நேற்று எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பணியையும் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் நிலைமையை சமாளிக்க முடியாத மாநகராட்சி உதவி பொறியாளர் கோவிந்தபிரபாகர் மற்றும் ஊழியர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். தங்களை பணி செய்ய விடாமல் தடுப்பதாக அதிகாரிகள் போலீசில் புகார் தெரிவித்தனர்.
பரபரப்பு
உதவி ஆணையாளர் வாசுகுமார் மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி போராராட்டத்தை கைவிட செய்தனர். அதன்பிறகு மீண்டும் பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகள் இடிக்கும் பணி தொடர்ந்து நடந்தது. பொதுமக்களை கண்டித்து அதிகாரிகள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவத்தால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.