பருத்தி விலை நிலவர ஆலோசனை கூட்டம்
பாபநாசத்தில் பருத்தி விலை நிலவர ஆலோசனை கூட்டம் நடந்தது.
பாபநாசம்;
தஞ்சாவூர் விற்பனைக்குழு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் பருத்தி விலை நிலவரம் தொடர்பாக விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. தஞ்சாவூர் விற்பனைக்கு குழு செயலாளர் சரசு தலைமை தாங்கினார்.
தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கோமதிதங்கம், பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தாட்சாயினி, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி மற்றும் பலர் பேசினர்.கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசினா்.
அப்போது அவர்கள், பருத்தி விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்த ஆண்டு பருத்தி விளைச்சலும் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்திய பருத்தி கழகம் கொள்முதல் செய்ய முன் வந்தால் மட்டுமே விவசாயிகளை காப்பாற்ற முடியும் என கூறினர். இதைக்கேட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளை முழுமையாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.