டெங்கு குறித்து கவுன்சிலர்கள் வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - மேயர் பிரியா அறிவுறுத்தல்


டெங்கு குறித்து கவுன்சிலர்கள் வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - மேயர் பிரியா அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 30 Sep 2023 6:28 AM GMT (Updated: 30 Sep 2023 7:14 AM GMT)

டெங்கு பாதிப்பு குறித்து கவுன்சிலர்கள் தங்களது வார்டு பொதுமக்களுக்கு வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மேயர் பிரியா அறிவுறுத்தினார்.

சென்னை

சென்னை மாநகராட்சியின் செப்டம்பர் மாதத்துக்கான மாதாந்திர மன்றக்கூட்டம், ரிப்பன் மாளிகையில் கடந்த 27-ந்தேதி கூடியது. அப்போது, அண்மையில் உயிரிழந்த 59-வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 29-ந்தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நேற்று மாநகராட்சி மன்றக்கூட்டம் மீண்டும் கூடியது.

கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். மேயர் பிரியா தலைமையில் கவுன்சிலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கூட்டத்தில், நேரமில்லா நேரத்தின்போது நிலைக்குழு தலைவர் சாந்தகுமாரி (81-வது வார்டு) பேசியதாவது:-

டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என்னுடைய பகுதியில் உள்ள பக்கவாட்டு கால்வாய்களை சீரமைத்து தரவேண்டும்.

மேயர் பிரியா:- டெங்குவால் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். கவுன்சிலர்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் டெங்கு குறித்த விழிப்புணர்வு வீடியோவை பதிவு செய்தால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களுடைய வார்டுகளில் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். கவுன்சிலர்களும், அதிகாரிகளும் இணைந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டும்.

சாந்தகுமாரி:- இதேபோல, நாங்கள் ஒவ்வொரு பணியை மேற்கொள்ளும்போது அதிகாரிகளிடமிருந்து சரியாக பதில் கிடைப்பதில்லை. பதில் வந்தால்தான் எங்களுடைய பணியை சிறப்பாக செய்ய முடியும்.

மேயர் பிரியா:- கவுன்சிலர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நான் பலமுறை கூறியுள்ளேன். 2 கை சேர்ந்தால் மட்டுமே சத்தம் வரும். ஒருவர் மட்டுமே பிரச்சினை குறித்து பேசும் போது எதுவும் மாறிவிடாது. கவுன்சிலர்களை ஊக்கப்படுத்தி தாங்களும் சேர்ந்து வேலை செய்யுங்கள்.

ரவிச்சந்திரன் (தி.மு.க. மண்டல குழு தலைவர்):- பல்வேறு பகுதிகளில் இருந்து பெரிய அளவிலான கழிவுநீர் குழாய்கள் எங்கள் கல்லுக்குட்டை பகுதி வழியாக வருகிறது. இதனால் மழை பெய்யும்போது மழைநீர் வெளியே செல்ல முடியாமல் அப்படியே தேங்கி விடுகிறது. குடிநீர் வழங்கல் துறை சரிவர தங்களுடைய பணிகளை மேற்கொள்வதில்லை. கவுன்சிலர்கள் சொல்வதை குடிநீர் வழங்கல் துறைஅதிகாரிகள் மதிப்பதில்லை.

மேயர் பிரியா:- குழாய்களை உயர அமைப்பது குறித்து குடிநீர் வழங்கல் துறைக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. துறை அமைச்சரிடம் இதுகுறித்து தெரிவிக்கிறோம்.

சங்கர் கணேஷ் (வார்டு 151) :- என்னுடைய வார்டில் உள்ள நகர்புற அரசு ஆஸ்பத்திரியில் சரியான நேரத்துக்கு டாக்டர்கள் வருவதில்லை. நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனது வார்டில் தெரு நாய்களால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். தெரு நாய்களை முழுமையாக அகற்றி அதற்கென காப்பகங்களில் சேர்க்க வேண்டும்.

மேயர் பிரியா:- சரியான நேரத்தில் பணிக்கு வராத டாக்டர்களுக்கு அபராதம் விதிக்கலாம். தற்காலிக டாக்டர்கள் என்றால் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்க வேண்டும். தெருநாய்களுக்கு கருத்தடை செய்து மீண்டும் அதே பகுதிகளில் விடுவது தான் விதி. அதை தான் பின்பற்றி வருகிறோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story