விஷம் குடித்து தம்பதி தற்கொலை
சின்னசேலம் அருகே விஷம் குடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்
சின்னசேலம்
நெல் அறுவடை எந்திரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கீழ்பூண்டி மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன்(வயது 80), இவரது மனைவி செல்லம்மாள்(70). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இதில் இளைய மகன் கோவிந்தராஜ்(38) என்பவரும், ஈரியூர் கிராமத்தை சேர்ந்த கருப்பன் மகன் செல்வம்(35) என்பவரும் சேர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நெல் அறுவடை எந்திரம் வாங்கி, தொழில் செய்து வந்தனர்.
பாக்கியை தரவில்லை
இந்த நிலையில் நெல் அறுவடை எந்திரத்தை இருவரில் ஒருவர் வைத்துக்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நெல் அறுவடை எந்திரத்தை செல்வம் வைத்துக்கொள்வதென்றும், இதற்கு பதிலாக கோவிந்தரஜூக்கு ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்தை செல்வம் தர வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மேற்படி தொகையில் ரூ.50 ஆயிரத்தை கோவிந்தராஜிடம் கொடுத்த செல்வம் மீதி பணம் ரூ.8 லட்சத்து 38 ஆயிரத்தை 6 மாதத்தில் தருவதாக கூறினார். ஆனால் செல்வம், குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகும் கோவிந்தராஜூக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தரவில்லை என கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த அவர், செல்வத்துக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரத்தை ஓட்டி வந்து தனது வீட்டில் நிறுத்தி வைத்தார்.
பின்னர் இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் கோவிந்தராஜ் மீது செல்வம் புகார் கொடுத்தார். இதை அறிந்து மனவேதனை அடைந்த கோவிந்தராஜின் தந்தை ரங்கன், தாய் செல்லம்மாள் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்ததும் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தம்பதியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.