மின்கம்பி அறுந்து விழுந்து 3 பசுக்கள் சாவு
ராமநாதபுரம் அருேக மின்கம்பி அறுந்து விழுந்து 3 பசுக்கள் பரிதாபமாக இறந்தன.
ராமநாதபுரம் அருேக மின்கம்பி அறுந்து விழுந்து 3 பசுக்கள் பரிதாபமாக இறந்தன.
3 பசுக்கள் சாவு
ராமநாதபுரம் அருகே உள்ள கவரங்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகம்மாள். இவர் வங்கியில் கடன் வாங்கி ஐந்துக்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். முருகம்மாள் நேற்று காலை வழக்கம் போல் மேய்ச்சலுக்காக மாடுகளை கவரங்குளம் கண்மாய் பகுதியில் கொண்டு சென்றார். அங்கு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த நிலையில் பிற்பகலில் சாப்பிடுவதற்காக அவர் வீட்டிற்கு வந்து விட்டார்.
அப்போது கண்மாய் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த 5 மாடுகளில் 3 பசு மாடுகள் மீது அந்த வழியாக மேலே சென்ற மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதில் அந்த 3 பசுக்களும் மின்சாரம் தாக்கி ஒவ்வொன்றாக சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தன.
பரபரப்பு
இதற்கிடையே சாப்பிட்டு விட்டு மாடுகளை பார்க்க வந்த முருகம்மாள் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி பசுக்கள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் உடனடியாக இதுகுறித்து மின்வாரியத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அவர்கள் விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்து அறுந்து கிடந்த மின் கம்பியை சரி செய்தனர். அதிர்ஷ்டவசமாக யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கடன் வாங்கி பசுக்களை வளர்த்து பிழைப்பு நடத்தி வரும் தனக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று முருகம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.