காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றமே நிகழாமல் தடுக்கப்படும் -முதல்-அமைச்சர் பேச்சு


காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றமே நிகழாமல் தடுக்கப்படும் -முதல்-அமைச்சர் பேச்சு
x

காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றமே நிகழாமல் தடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி (காவல்துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவு) திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. சிற்பி திட்டத்தை தொடங்கி வைத்து முதல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-

காவல்துறையை மக்களின் நண்பன் என்று சொல்கிறோம். அதற்கேற்ப, மக்கள் அனைவரும் காவல்துறையின் நண்பர்களாக இருக்க வேண்டும். இது எனது மட்டுமல்லாமல், அனைவருடைய எண்ணமுமாகும். காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றங்கள் குறையும் என்பதைவிட, குற்றமே நிகழாமலும் தடுக்கப்படும். மக்களையும், காவல்துறையையும் ஒன்றிணைக்கும் எத்தனையோ திட்டங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கின்றன. அதுபோன்ற ஒரு முக்கியமான திட்டமாக சிற்பி என்ற புதிய முன்னெடுப்பை தமிழ்நாடு காவல்துறை உருவாக்கியிருக்கிறது. பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கும் திட்டம் இது. சிறுவர்களை இளமை காலம் முதலே பொது ஒழுக்கம் உள்ளவர்களாகவும், சமூக பொறுப்புள்ளவர்களாகவும் ஆக்க இந்த திட்டம் பயன்படும்.

விழிப்புணர்வு

சிறார் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறது. சிறார் குற்றச்செயல்களில் ஈடுபட குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய குடும்ப வருமானம் இல்லாமை, ஆதரவில்லாமல் சிறார்கள் வளர்வது, வேலைவாய்ப்பின்மை போன்றவை பெரும்பாலும் இதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. இவற்றை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலமாக சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கிறது.

வளர்ச்சி என்பது ஒரு பக்கத்திலே இருந்தாலும் மற்றொரு பக்கத்திலே சில சமூக பிரச்சினைகள் அதிகமாகி வருகின்றன. அதை தடுத்தாக வேண்டும். போதை பொருள் ஒழிப்பு, குடிப்பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு பெறச்செய்தல், அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் தொடர்பினை ஏற்படுத்துதல், சுய ஆளுமைத்திறனை மேம்படுத்துதல், பெற்றோர்களது பேச்சை மதித்து நடத்தல், பொதுமக்களோடு தொடர்பு, இளம் வயதில் இருந்து போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க செய்தல், மாநிலத்தின் செழுமை மற்றும் வளர்ச்சியை கண்டு பெருமை கொள்ளச் செய்தல் ஆகிய பண்புகளை சிறார்களிடையே உருவாக்கியாக வேண்டும். இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் தலைசிறந்து விளங்குவார்கள். அதாவது சிற்பியைப் போல நாம் மாணவர்களைச் சிரத்தை எடுத்து செதுக்கியாக வேண்டும்.

நாடு காக்கும் தலைவன்

ஏடு தூக்கும் சிறுவர்கள், நாடு காக்கும் தலைவனாகும் எதிர்காலத்தை நம்முடைய சிறுவர்களைச் சமூக ஒழுக்கங்களோடு வளர்த்தெடுக்க வேண்டியது நமது கடமை. அப்படி உருவாகும் இளைஞர்கள், சிறந்த சமுதாயத்தை உருவாக்குவார்கள். இந்த பயிற்சி காலத்தில் மனித உரிமை மீறல்கள் இருக்கக்கூடாது. அவர்களது தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் யாரும் நடக்கக்கூடாது. எந்தவிதமான புகாரும் வராமல் இந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். நல்லொழுக்கம் கொண்டவர்களாக அவர்களை வளர்ப்பதன் மூலமாக நல்ல தலைமுறைகளை உருவாக்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்றோர்

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வரவேற்புரை ஆற்றினார். சிற்பி திட்டத்தில் சேரும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீருடைகளை வழங்கினார். திட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.

அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மு.பெ.சாமிநாதன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மேயர் பிரியா உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின்போது பள்ளி மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நன்றி கூறினார்.


Next Story