சி.ஆர்.பி.எப். வீராங்கனைகளுக்கு பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு


சி.ஆர்.பி.எப். வீராங்கனைகளுக்கு பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு
x

கன்னியாகுமரியில் இருந்து குஜராத்துக்கு மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளும் சி.ஆர்.பி.எப். வீராங்கனைகளுக்கு பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற மத்திய அரசின் திட்டம் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய ராணுவத்தின் சி.ஆர்.பி.எப். வீராங்கனைகள் கன்னியாகுமரியில் இருந்து குஜராத்துக்கு 25 மோட்டார் சைக்கிள்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கன்னியாகுமரியில் கடந்த 5-ந்தேதி தொடங்கிய பயணம் திருச்சி வழியாக நேற்று மதியம் பெரம்பலூர் மாவட்டத்துக்கு வந்தடைந்தனர்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன வளாகத்தில் வைத்து அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் அந்த கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாலையில் புறப்பட்டனர். அப்போது அவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். அப்போது சாலையின் இருபுறமும் நின்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவர்களுக்கு பூக்களை தூவி வழியனுப்பி வைத்தனர். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், இந்திய ரிசர்வ் படையின் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பெரம்பலூர் ஊர்க்காவல் படையின் மண்டல தளபதி அரவிந்தன், கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்பிரமணியன், செயலாளர் விவேகானந்தன், ரோட்டரி சங்க பெரம்பலூர் மாவட்ட கவர்னர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளும் சி.ஆர்.பி.எப். வீராங்கனைகள் வருகிற 31-ந்தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை முன்பு சென்று பயணத்தை நிறைவு செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story