சைக்கிளிங் போட்டி: அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் செங்கல்ட்டு மாவட்ட கலெக்டர் ஆலோசனை


சைக்கிளிங் போட்டி: அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் செங்கல்ட்டு மாவட்ட கலெக்டர் ஆலோசனை
x

வருகிற 15-ந் தேதி கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை சைக்கிளிங் போட்டி நடைபெற உள்ளது. அதையொட்டி அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் செங்கல்ட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆலோசனை நடத்தினார்.

செங்கல்பட்டு

சைக்கிளிங் போட்டி

செங்கல்ட்டு மாவட்டம் அக்கரை முதல் மாமல்லபுரம் வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில் வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) சைக்களத்தான் என்ற பெயரில் 55 கி.மீ. தூரத்திற்கான சைக்கிளிங் போட்டி நடத்தப்படுகிறது.

தேசிய அளவிலான இந்த போட்டியில் ஏசியன் போட்டியில் பங்கேற்ற வீரர்கள், டெல்லி, பீகார், மராட்டியம், குஜராத், உத்தரபிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற மாநிலங்களை சேர்ந்த சைக்கிளிங் வீரர்கள் 1200 பேர் பங்கேற்கின்றனர்.

ஆலோசனை கூட்டம்

கானத்தூர் பகுதியில் சைக்கிளிங் போட்டியை வருகிற 15-ந்தேதி விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டி நடப்பதால் கிழக்கு கடற்கரை சாலையில் ரிசார்ட்டுகள், ஓட்டல்கள், பண்ணை வீடுகள் போன்றவற்றின் நிர்வாக மேலாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோரை அழைத்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அப்போது அவர்கள் மத்தியில் கலெக்டர் ராகுல்நாத் பேசும்போது கூறியதாவது:-

சைக்கிளிங் போட்டி நடத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டு, ஓட்டல் நிறுவனத்தினர் தங்களுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் வருகிற 15-ந்தேதி காலை 4.30 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் விருந்தினர்களை அறைகளை காலி செய்து கார்கள், வாகனங்களில் வெளியே அனுப்ப கூடாது.

மாடுகளை திரிய விடக்கூடாது

கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் போட்டி நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை 55 கிலோ மீட்டர் வேகத்தில் சைக்கிளிங் வீரர்கள் சைக்கிள் ஓட்ட உள்ளதால் அவர்கள் மாடுகளால் விபத்தில் சிக்கி காயம் ஏற்படாத வண்ணம் கிழக்கு கடற்கரை சாலையில் மாடுகள் வைத்திருப்பவர்கள் வீட்டில் கட்டி வைக்க வேண்டும்.

அன்று எக்காரணம் கொண்டும் சாலையில் மாடுகளை திரிய விடக்கூடாது. அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளாட்சி துறை அதிகாரிகள் இதனை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத், தாம்பரம் இணை கமிஷனர் குமார், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மாமல்லபுரம் போரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், ஒன்றிய கவுன்சிலர் தேசிங்கு, செங்கல்பட்டு மாவட்ட ஓட்டல்கள் சங்க தலைவா் பாண்டியன், மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story