அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 1993 அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணை தலைவர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் மலர்க்கொடி, செயலாளர் பிரேமா, பொருளாளர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 5 ஆண்டு பணி முடித்த குறுமைய ஊழியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் ஒரு ஆண்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ராசிபுரம், பள்ளிபாளையம்

இதேபோல் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிவகாமி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக ஸ்ரீதர் கலந்து கொண்டு பேசினார். இதில் 150-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

பள்ளிபாளையத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார ஒன்றிய தலைவர் விஜயா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அம்பிகா, பொருளாளர் மகேஸ்வரி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பணியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 10 வருடம் பணி முடித்த உதவியாளர்களுக்கும், தகுதியுள்ள அனைவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

திருச்செங்கோடு, எலச்சிபாளையம்

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தலைவி பாண்டிமா தேவி தலைமையில் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. மாவட்ட குழு ராயப்பன், மாவட்ட துணை தலைவர் ஜமுனா, முன்னாள் அரசு ஊழியர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணைச் செயலாளர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வட்டாரத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சங்க நிர்வாகிகளிடம் 3 மாதத்திற்கு ஒருமுறை அழைத்து பேச வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எலச்சிபாளையம் பஸ் நிறுத்தத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கும் ஒரு வருடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட உதவி செயலாளர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் சுசீலா, பொருளாளர் நித்தியகல்யாணி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மோகனூர்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மோகனூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் குர்சித் பேகம் தலைமை தாங்கினர். ஒன்றிய தலைவர் பாலாமணி, செயலாளர் வனிதாமணி, சி.ஐ.டி.யு. மாவட்ட குழு தோழர் ஞானபிரகாசம், செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் மோகனூர் ஒன்றியத்திற்குட்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story