மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை
மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராதாகிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தமிழன் வரவேற்றார். இதில் மாவட்ட துணை செயலாளர் செல்லையன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாஞ்சில் கார்த்திக், மாவட்ட பேரவை இணை செயலாளர் முருகவேல், பேச்சாளர் மணவைமாறன், பேரூர் செயலாளர்கள் எம்.சி.பாலு, தொல்காப்பியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சீர்காழி
சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், நற்குணன், ரவிச்சந்திரன், சிவக்குமார், பேரூர் செயலாளர் போகர். ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி நகர செயலாளர் வினோத் வரவேற்றார். இதில் மாவட்ட அவைத் தலைவர் பாரதி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சக்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது மின் கட்டணம், பால் கட்டணம், சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
தூர்வார வேண்டும்
மேலும் சீர்காழி நகர் பகுதியில் தினமும் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீர்நிலைகளை தூர்வார வேண்டும். பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும். எரிவாயு தகன மேடையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட துணை செயலாளர் செல்லையன், பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், முன்னாள் நகர செயலாளர் பக்கிரிசாமி, மணி, முன்னாள் நகரசபை தலைவர் இறைஎழில், மகளிர் அணி செயலாளர் சாந்தி, வக்கீல்கள் நெடுஞ்செழியன், பாலாஜி, தியாகராஜன், அம்சேந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் பாலா. பரணிதரன் நன்றி கூறினார்.