பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் திருப்பத்தூர் சப்- கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சந்திரன், ஜெயராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். குருமன் பழங்குடி மக்கள் சங்கம் வீரபத்திரன் முன்னிலை வகித்தார். அரங்கநாதன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.சண்முகம் தொடங்கி வைத்து பேசினார்.
மாநில கூர்நோக்கு குழுவிலும், மாவட்ட விழிகள் குழுவின் மூலமும் மெய் தன்மை அறிந்து குருமன்ஸ் பழங்குடிதான் என்று உறுதி செய்யப்பட்டவர்களின் வாரிசுதாரர்களுக்கும், உறவினர்களுக்கும் குருமன்ஸ் பழங்குடி இன சான்றிதழ் உடனே வழங்க வேண்டும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் குருமன்ஸ் பழங்குடியின மக்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்பாடு, குலம், தொழில் அடிப்படையில் குருமன்ஸ் பழங்குடியினர் சான்று வழங்க வேண்டும். சொத்து வீடு இல்லாத பழங்குடி மக்களுக்கு உடனடியாக வீடு கட்டித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் கருவீரன், வஜ்ரம், பா.சக்திவேல் மற்றும் ஜவ்வாதுமலை, ஏலகிரி மலைவாழ் மக்கள் சங்கம், குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் கோரிக்கை மனுக்களை சப்- கலெக்டரிடம் அளித்தனர்.