2 ஆயிரம் ஆசிரியர்களை திரட்டி சென்னையில் 28-ந் தேதி ஆர்ப்பாட்டம்
2 ஆயிரம் ஆசிரியர்களை திரட்டி சென்னையில் 28-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை -ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிஎன்எஸ்இ-ஜாக்டோ) அமைப்பின் உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் சங்கரபெருமாள், உதயசூரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பிறகு ஒருங்கிணைப்பாளர் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் இருக்கக்கூடிய 20 ஆசிரியர் இயக்கங்கள் ஒன்றாக இணைந்து பள்ளிக்கல்வித்துறை-ஜாக்டோ என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறோம். இதன் மூலமாக இந்த மாதம் 28-ந் தேதி 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆயிரம் ஆசிரியர்களை அணி திரட்டி சென்னையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பதவி உயர்வு என்ற நிலையை திரும்பப்பெற வேண்டும். உயர்கல்வி தகுதிக்கான ஊக்க ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதம் இருப்போம். அதற்கும் செவிசாய்க்காவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். பள்ளிகளில் திடீரென நடத்தப்படும் குழு ஆய்வு எந்த பலனும் கொடுக்காது. ஆகவே இந்த ஆய்வை ரத்து செய்து மக்களின் வரிப்பணம் காப்பாற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.