தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை


தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை
x

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் 1000 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பள்ளி தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையில், தலைமை ஆசிரியர் இல்லாததால் அரசு பள்ளிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்துவருகின்றன.

இதனை நிவர்த்திசெய்யும் வகையில் விரைவில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட இருக்கின்றன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில், துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளான முதுகலை ஆசிரியர்கள், 17 A, 17 B போன்ற பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்ற ஆசிரியர்கள், மற்றும் பல்வேறு பிரச்சினைகளில் தண்டனை பெற்று, தண்டனை காலம் முடிவடையாமல் உள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் தலைமை ஆசிரியர் பதவிக்கு பரிந்துரைக்க கூடாது என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த புகாருக்கும் உள்ளாகாத, குற்றவியல் வழக்குகளில் சிக்காத ஆசிரியர்கள் மட்டுமே பதவி உயர்வு கலந்தாய்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தகுதிவாய்ந்த முதுகலை ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகிறது. விரைவில் கலந்தாய்வு நடத்தி, தலைமையாசிரியர் இல்லாத பள்ளிகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.


Next Story