4 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவதை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவதை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
குடற்புழு நீக்க நாள்
தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி 920 மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைளுக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் 'அல்பெண்டசோல்' குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும்.
நாம் பராம்பரிய வழக்கத்தை அடியோடு விட்டுவிட்டு, வேறு உணவு பழக்கத்திற்கு மாறிவிட்டோம். சிறுதானிய உணவு வகைகளை நாம் உபயோகப்படுத்துவதில்லை.
பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் ஆண்கள் நலமாக இருக்க முடியும். நமது உணவு பழக்க மாறுபாடு காரணமாக உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. கருவுற்ற தாய்மார்களுக்கு ஹீமோகுளோபின் குறைய ஆரம்பிப்பது ரத்த சோகை வருவதற்கு காரணமாக அமைகிறது. ரத்த சோகையினால் கருவுற்ற தாய்மார்கள் அதிக இறக்க நேரிடுகிறது, அந்த குழந்தை தாயற்ற குழந்தையாக வளர்கிறது. குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது தாயினால் தான் முடியும்.
21-ந் தேதி வரை
ஹீமோகுளோபின் உங்களுக்கு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் இத்திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் வழங்குவதற்காக தொடங்கி வைத்துள்ளார். நமது மாவட்டத்தில் அங்கன்வாடிகளிலும், மருத்துவமனைகளிலும் பள்ளிகளிலும். 21-ந் தேதி வரை குடற்புழுநீக்க மாத்திரை வழங்கப்படும்.
மாவட்டத்தில் 989 பள்ளிகள் மற்றும் 968 அங்கன்வாடி மையங்கள் மூலம் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள 3 லட்சத்து 18 ஆயிரத்து 497 குழந்தைகள் மற்றும் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள 1 லட்சத்து 171 பெண்கள் என மொத்தம் 4 லட்சத்து 19 ஆயிரத்து 668 நபர்கள் பயனடைவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில், முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பியூலா, நகர மன்ற துணை தலைவர் சபியுல்லா, வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்யா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவரும் 4,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி, கழிவறைகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.