4¼ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை


4¼ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
x
தினத்தந்தி 16 Aug 2023 6:45 PM GMT (Updated: 16 Aug 2023 6:45 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 4¼ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை இன்று முதல் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 4¼ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை இன்று முதல் வழங்கப்படுகிறது.

குடற்புழு நீக்க மாத்திரை

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) இன்று (வியாழக்கிழமை) வழங்கப்படுகிறது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மற்றும் பெற்றோர் இல்லாத குழந்தைகளை பராமரிக்கும் மற்றும் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திலேயே வழங்கப்படுகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு

இந்த மாத்திரையின் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் நலமாக வாழ்வதற்கும் கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. இத்திட்டத்தின் மூலம் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 4 லட்சத்து 15 ஆயிரத்து 933 குழந்தைகள் பயன் பெறுவார்கள்.

இந்த திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த பொதுசுகாதாரம், பள்ளிக்கல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் ஆகிய துறைகளின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

விடுப்பட்டவர்களுக்கு...

அல்பெண்டசோல் மாத்திரை அளவு 1 முதல் 2 வயதுக்குட்பட்டவர்களுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும். அல்பெண்டசோல் மாத்திரையை நன்றாக சப்பிசாப்பிட வேண்டும். குழந்தைகள் நோய் வாய்ப்பட்டிருந்தால் மாத்திரை வழங்கக்கூடாது. விடுப்பட்ட குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க நாளான வருகிற 24-ந் தேதி அன்று மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரத்தசோகை

குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகையை தடுக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கி குழந்தைகளின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story