தண்ணீர் தேடி கிராமத்துக்குள் புகுந்த புள்ளிமான் தெருநாய்கள் கடித்து உயிரிழப்பு...!
பொம்மிடி அருகே தண்ணீர் தேடி கிராமத்துக்குள் புகுந்த புள்ளிமான் தெருநாய்கள் கடித்து செத்தது.
பாப்பிரெட்டிப்பட்டி:
பொம்மிடி அருகே தண்ணீர் தேடி கிராமத்துக்குள் புகுந்த புள்ளிமான் தெருநாய்கள் கடித்து செத்தது.
புள்ளிமான்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள கவரமலை வனப்பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. இந்த நிலையில் கவரமலை வனப்பகுதியில் தற்போது தண்ணீர் தட்டுப்பாட்டால் அங்கள்ள புள்ளி மான்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் தேடி வருகின்றன.
இவ்வாறு கிராமத்துக்குள் வரும் புள்ளி மான்களை தெருநாய்கள் துரத்தி கடிப்பதால் மான்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.
தெருநாய்கள் கடித்தன
இதன்படி நேற்று கவரமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளி மான் ஒன்று தண்ணீர் தேடி பொம்மிடி அருகே பி.பள்ளிபட்டி லூர்துபுரம் கிராமத்துக்குள் புகுந்தது. இதையடுத்து புள்ளிமானை கண்ட கிராமத்தில் உள்ள தெருநாய்கள் புள்ளி மானை துரத்தி துரத்தி சென்று கடித்தது.
இதில் பலத்த காயம் அடைந்த புள்ளி மான் சம்பவ இடத்திலேயே செத்தது. இதுகுறித்து பொம்மிடி வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற மொரப்பூர் வன அலுவலர் ஆனந்தகுமார் தலைமையிலான வனத்துறையினர் புள்ளி மான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.