நண்பரிடம் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்திய டி.ஐ.ஜி. விஜயகுமார்
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமார், 2 நாட்களுக்கு முன்பு தனது நண்பர் ஒருவரிடம் தற்கொலை எண்ணம் குறித்து கூறியுள்ளார்.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமார், 2 நாட்களுக்கு முன்பு தனது நண்பர் ஒருவரிடம் தற்கொலை எண்ணம் குறித்து கூறியுள்ளார்.
டி.ஐ.ஜி. தற்கொலை
கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழக போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர் ஓ.சி.டி. வகை மன அழுத்தத்தால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
2 மணிநேரம் கவுன்சிலிங்
தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார், கடந்த 10 ஆண்டுகளாக ஓ.சி.டி. என்னும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்துள்ளார்.
ஆனால் அவர் அடிக்கடி டாக்டர்களையும், மருந்துகளையும் மாற்றி மாற்றியுள்ளார். இணையதளத்தில் நிறைய குறிப்புகள் எடுத்து ஆயுர்வேத மருந்துகளையும் எடுத்து இருக்கிறார்.
குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே தனது பிரச்சினையை கூறியுள்ளார். அந்த வகையில் டி.ஐ.ஜி. விஜயகுமார் தனக்கான பிரச்சினைகள் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூறியுள்ளார்.
உடனே அந்த அதிகாரி, டி.ஐ.ஜி. விஜயகுமாரையும், அவரது மனைவியையும் அழைத்து 2 மணிநேரம் கவுன்சிலிங் கொடுத்து உள்ளார். மேலும் மன அழுத்தத்தில் இருந்து மீள்வது குறித்து சில வழிமுறைகளையும் கூறியுள்ளார்.
நண்பரிடம் கூறினார்
இதற்கிடையே டி.ஐ.ஜி. விஜயகுமார், கோவையில் உள்ள தனது நெருங்கிய நண்பரான அரசுத் துறை அதிகாரி ஒருவரிடம், தனது பிரச்சினை குறித்தும், தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.
அதற்கு அவர், எல்லாம் சரியாகிவிடும். மனஉளைச்சலை போக்க ஆனைக்கட்டிக்கு சுற்றுலா செல்லலாம் என்று கூறி உள்ளார். ஆனால் அந்த அதிகாரிக்கு வேறு பணி வந்து விட்டது. இதனால் அவர்கள் சுற்றுலா செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
அவ்வாறு அவர் வெளியிடத்துக்கு சென்று இருந்தால் இந்த துயர சம்பவம் நேர்ந்து இருக்காது.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சம்பவ தினத்துக்கு முந்தையநாள் இரவு முகாம் அலுவலகம் வந்த டி.ஐ.ஜி. விஜயகுமார், தனது பாதுகாவலரிடம் "நீ பயன்படுத்தும் துப்பாக்கியை எங்கே வைப்பாய், குண்டு நிரப்பி வைப்பாயா?" என்பது போன்ற கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு பாதுகாவலரும் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று முன்தினம் காலை 6.50 மணிக்கு பாதுகாவலர் அறைக்கு சென்று அவர் பயன்படுத்தும் துப்பாக்கியை எடுத்து சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
மேற்கண்ட விவரங்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விரிவான விசாரணை
தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், டி.ஐ.ஜி. விஜயகுமார் கடந்த சில நாட்களாகவே தற்கொலை எண்ணத்து டன் இருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யும் நோக்கிலேயே பாதுகாவலரிடம் துப்பாக்கி பற்றி விசாரித்ததும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடக்கிறது.
டி.ஐ.ஜி. தற்கொலை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.