டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் தகனம் - 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்திய காவல்துறை


டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் தகனம் - 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்திய காவல்துறை
x

காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க விஜயகுமார் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

தேனி,

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார்(வயது 45) இன்று காலையில் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். கீதா வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டத் தொடர்ந்து, டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடல் தேனியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து உறவினர்கள், பொதுமக்களின் அஞ்சலியைத் தொடர்ந்து டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடல் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. அப்போது காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க விஜயகுமார் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இறுதி மரியாதை நிகழ்ச்சியில் தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பங்கேற்றார். இதையடுத்து பழைய பள்ளிவாசல் தெரு பகுதியில் உள்ள மயானத்தில் டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.


Next Story