தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

போக்குவரத்திற்கு இடையூறு

புதுக்கோட்டையின் பிரதான சாலையான கீழராஜ வீதியில் சாலையின் இருபுறங்களிலும் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வங்கிகள் இருக்கும் இடங்களில், வங்கியின் நுழைவு வாயிலுக்குள் செல்லமுடியாதபடி அதிக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரபீக் சுலைமான், புதுக்கோட்டை.

`தினத்தந்தி'புகார் பெட்டிக்கு நன்றி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, குறிச்சிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகே உள்ள மின்கம்பமானது மிகவும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இதனால் எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. பள்ளிக்கு வரும் குழந்தைகள் இவ்வழியாகவும் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி சேதமடைந்த மின்கம்பம் அருகே முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அவ்வழியாக செல்லும்போது அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே எந்த ஒரு அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்பாக எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ள அந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், குறிச்சிப்பட்டி.

விவசாயிகள் அவதி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, முத்தானிப்பட்டியில் இருந்து கல்லுமடை செல்லும் சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படாமல் குண்டும், குழியுமாக தற்போது மண் சாலைபோல் மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாததால் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். விவசாயம் நிறைந்த பகுதி என்பதால் விவசாய இடுபொருட்களை வயலுக்கு கொண்டு செல்லவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து செல்லவும் முடியாமல் விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விவசாயிகள், கல்லுமடை.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் இருந்து தென்னகர் பச்சநாயகம் பகுதிக்கும் செல்லும் சாலையில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் ஒரு தனியார் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட பஸ் மற்றும் வேன்களும் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த சாலையில் செல்லும் மின்கம்பிகள் மிக தாழ்வாக செல்கிறது. இதனால் அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அச்சத்துடன் பள்ளிக்கு அனுப்பும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கறம்பக்குடி.


Next Story