தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

உயர் கோபுர மின் விளக்கு வேண்டும்

பெரம்பலூரில் ரோவர் சாலை எளம்பலூர் சாலையுடன் சந்திக்கும் இடத்தில் இரவு நேரத்தில் வெளிச்சம் இன்றி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இரு திசைகளிலும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோரும், கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களில் செல்வோரும் போதிய வெளிச்சம் இன்றி எதிரே வரும் வாகனங்களை கணிக்க முடியாமல் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

புதர்களை அகற்ற வேண்டும்

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை பின்புறம் மதனகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. இப்பகுதி முட்களும், புதர்களும் விளைந்து காடு போல் வளர்ந்துள்ளன. மேலும் வடக்கு மாதவி சாலையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கறிக்கோழி கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகள் இப்பகுதியில் தொடர்ந்து கொட்டப்படுகிறது. பொதுமக்கள் இந்த நிலத்தில் தங்களது வீட்டுகுப்பைகளை தினமும் கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் சூழல் சீர்கேடு அடைகிறது. அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் புதர்கள் மண்டிப்போய் சுகாதார சீர்கேட்டை விளைவித்து வருகிறது. டெங்கு கொசுக்களின் பிறப்பிடமாக உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இப்புதர்களை கோவில் நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் அகற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சாமியப்பா நகர்.

ஜல்லி கற்களால் போக்குவரத்திற்கு இடையூறு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அசூர் கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலையின் இடதுபுறம் சிறிய அளவிலான ஜல்லி கற்கள் கொட்டி கிடக்கிறது. அந்த சாலையின் ஓரமாக இருசக்கர வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. எனவே அந்த சாலையை சுத்தம் செய்யது ஜல்லி கற்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அசூர் ஒதியம்.

குண்டும், குழியுமான தார்சாலை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுகன்பூர் கிராமத்தில் தார் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி செல்கின்றனர். இதில் சிலர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சிறுகன்பூர்.

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா மாவிலிங்கை கிராமத்தில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதினால் அவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரிய உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மாவிலிங்கை.

1 More update

Next Story