திண்டுக்கல் மாணவி நந்தினி மாநிலத்தில் முதலிடம்


திண்டுக்கல் மாணவி நந்தினி மாநிலத்தில் முதலிடம்
x

பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் சதம் அடித்து திண்டுக்கல் மாணவி நந்தினி சாதனை படைத்துள்ளார்.

திண்டுக்கல்

93.77 சதவீத தேர்ச்சி

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடந்தது. இதற்கான தேர்வு முடிவு நேற்று காலை 9.30 மணிக்கு வெளியானது.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 9 ஆயிரத்து 689 மாணவர்கள், 11 ஆயிரத்து 113 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 802 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

இதில் 8 ஆயிரத்து 840 மாணவர்கள், 10 ஆயிரத்து 665 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 505 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இது 93.77 சதவீதம் ஆகும். மாநில அளவில், 21-வது இடத்தை திண்டுக்கல் மாவட்டம் பிடித்துள்ளது.

திண்டுக்கல் மாணவி சாதனை

பிளஸ்-2 தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளியான, திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி சாதனை படைத்துள்ளார்.

அதாவது தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுத்து அவர் மாநில அளவில் முதலிடத்தை பிடித்து இருக்கிறார். 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து அவர் சாதனை படைத்துள்ளார்.

ஆரத்தி எடுத்து...

இதுபற்றி அறிந்த மாணவி நந்தினி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாணவி தனது பெற்றோருடன் பள்ளிக்கு வந்தார். அவரது நண்பர்கள், உறவினர்களும் அங்கு வந்திருந்தனர்.

பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், அலுவலர்கள் என அனைவரும் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவரை பள்ளி வளாகத்தில் நிறுத்தி ஆரத்தி எடுத்து, பூசணிக்காய் உடைத்து திருஷ்டி சுற்றி போட்டனர்.

மாணவியின் பெற்றோரும், தங்களது மகளுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அமைச்சர் வாழ்த்து

இதற்கிடையே சாதனை மாணவி நந்தினியை, தனது வீட்டுக்கு வரவழைத்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி வாழ்த்து தெரிவித்தார்.

மாணவிக்கு இனிப்பு கொடுத்து, நினைவு பரிசு வழங்கி அமைச்சர் வாழ்த்தினார். அப்போது மாணவியின் தந்தை சரவணக்குமார், தாய் பானுப்பிரியா, தம்பி பிரவின்குமார் மற்றும் பள்ளி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தச்சுத்தொழிலாளியின் மகள்

சாதனை மாணவி நந்தினின் தந்தை சரவணக்குமார் ஒரு தச்சுத்தொழிலாளி ஆவார். அவரது தாய் பானுப்பிரியா இல்லத்தரசி. தம்பி பிரவின்குமார், திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவி நந்தினி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 491 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். தமிழ் பாடத்தில் அவர் 99 மதிப்பெண்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story