சோழர்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
பட்டீஸ்வரம் அருகே ஜெகநாதபெருமாள் கோவிலில் சோழர்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
பட்டீஸ்வரம் அருகே ஜெகநாதபெருமாள் கோவிலில் சோழர்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
ஆய்வு
தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரம் அருகே உள்ள நாதன்கோவிலில் (பழையாறை-நந்திபுரம்) ஜெகநாதபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சோழர்கால கல்வெட்டுகள் இருப்பதாக கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி போராசிரியர் வித்யா தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கண்ணதாசனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பேராசிரியர் கண்ணதாசன், பொந்தியாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தில்லைகோவிந்தராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கல்வெட்டுகளை பார்த்து ஆய்வு செய்தனர்.
சோழர்கால கல்வெட்டுகள்
பின்னர் அவர்கள் கூறுகையில், இந்த கோவில் கொடிமரத்தின் அடிப்பகுதியில் நான்கு துண்டுகளாக உள்ள கல்வெட்டுகள் சோழர்காலத்தைச் சேர்ந்ததாகும். இவற்றில் உள்ள எழுத்துக்கள் மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகளில் ஈஸ்வரமுடையார், திருக்காமகோட்டம், நாச்சியார் என்ற இறைவடிவங்களின் பெயரும், உடன்யான் பத்மநாபன் பட்டர், சத்திவநனாபப்பட்டன், பற்பனாபநம்பட்டன் என்ற பெயர்களும், கோவில் நிலபரிவர்த்தனைபற்றியும், கோவில் கணக்கன் பழையனூருடையான், கண்காணி ஊத்துக்காட்டுடையான் என்று அதிகாரிகளின் பெயர்களும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகளில் வைணவ பட்டர்கள் பெயர்கள் குறிக்கப்படுவதிலிருந்து மேற்கண்ட வைணவர்கள் ஜெகநாதப்பெருமாள் கோவில் ஊழியர்களாக இருந்திருத்தல் வேண்டுமென்று இப்பகுதியில் சோழர் ஆட்சி காலத்தில் வைணவம் சிறப்புற்று இருந்துள்ளதை காணமுடிகின்றது என்றனர்.