போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த பெண் சத்துணவு அமைப்பாளர் பணிநீக்கம்


போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த பெண் சத்துணவு அமைப்பாளர் பணிநீக்கம்
x
தினத்தந்தி 5 Feb 2023 6:45 PM GMT (Updated: 5 Feb 2023 6:46 PM GMT)
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே அமானி மல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வானை. இவர் கடந்த 2012-ம் ஆண்டு பாலக்கோடு அருகே வட்டகானம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு விதவைகளுக்கான முன்னுரிமையில் நியமனம் செய்யப்பட்டார். தற்போது இவர் அத்திமுட்லு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தெய்வானை போலியாக சான்றிதழ் தயாரித்து தான் விதவை என்று கூறி பணி ஆணை பெற்றதாக சரோஜா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தெய்வானை மறு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருவதாகவும், விதவை என்று கூறி போலி சான்றிதழ் பெற்று சத்துணவு அமைப்பாளர் பணியை பெற்றதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து விசாரணையில் தெய்வானை மறு திருமணம் செய்து கொண்டு விதவை சான்று பெற்று பணியில் சேர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து தெய்வானையின் விதவை சான்றை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி அத்திமுட்லு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் தெய்வானையை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story