நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வினியோகம்-அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்


நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வினியோகம்-அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 4 May 2023 6:00 AM GMT (Updated: 4 May 2023 6:00 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வினியோக திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

நீலகிரி

ஊட்டி


தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டையொட்டி ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்களையும் சேர்த்து வழங்க அரசு முடிவெடுத்து பொது வினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2 கிலோ அரிசிக்கு பதிலாக 2 கிலோ கேழ்வரகு வழங்க ஆணையிடப்பட்டு உள்ளது.

முதல் கட்டமாக இந்த திட்டம் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டத்திற்கான தொடக்க விழா ஊட்டி அருகே பாலகொலா கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் நேற்று நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் ஆகியோர் தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

மற்ற மாவட்டங்களுக்கும்

இதைத் தொடர்ந்து உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2.29 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்கு மாதம் ஒன்றுக்கு 439 மெட்ரிக் டன் கேழ்வரகும், தர்மபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 4.66 குடும்ப அட்டைகளுக்கு 932 மெட்ரிக் டன் கேழ்வரகும் வழங்கப்பட்டு உள்ளது. கேழ்வரகு விளைச்சல் மற்றும் இருப்பை பொறுத்து மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு இந்திய உணவுக் கழத்தின் மூலம் 1,350 மெட்ரிக் டன் கேழ்வரகை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தை தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த தேவைப்படும் கூடுதல் கேழ்வரகை கர்நாடக மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்படும்.

நேரடி கொள்முதல் நிலையங்கள்

கேழ்வரகை அதிக அளவில் சாகுபடி செய்யும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சிறுதானிய சாகுபடி செய்யும் பிற மாவட்டங்களில் படிப்படியாக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் சிறுதானியங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால் நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தில் சிறந்த தற்காப்பு கருவியாக உள்ளன. எனவே, தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் வழங்கும் 2 கிலோ கேழ்வரகை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

20 ஆயிரம் கோடி தள்ளுபடி

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துவது கூட்டுறவுத்துறை ஆகும். தமிழகத்தில் 2.20 கோடி குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம், 14 வகை தொகுப்பு, பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ஆகியவை கூட்டுறவுத்துறை மூலம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 34,291 ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு குடிமைப் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு சலுகைகள், பொருளாதார பலன்கள் கூட்டுறவு வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசு ரூ.5013 கோடி நகைக்கடன், ரூ.2256 கோடி சுய உதவிக்குழுக்கள் கடன், ரூ.12,400 கோடி பயிர் கடன் என ஒரு ஆண்டில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி வரை தள்ளுபடி செய்தது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கூட்டுறவுத்துறை முதன்முதலாக உருவாக்கப்பட்டது. குடிமைப் பொருட்கள் வினியோகத்தில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது என்றார்.

விழாவில், கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் பிரபாகர், மாவட்ட கலெக்டர் அம்ரித், வருவாய் ஆய்வாளர் கீர்த்தி பிரியதர்ஷினி, இணை பதிவாளர் வாஞ்சிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story